‘‘அரசின் கருவூலத்திலிருந்து மானியம் பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்

இந்தியா முழுவதும் கிறிஸ்தவ மத அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. ‘சிறுபான்மையினர்’ என்ற பெயரில் அவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகின்றன.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ மத அமைப்புகள் நடத்துபவைகளாகவே இருக்கின்றன. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு மாநில அரசு சம்பளம் வழங்குகிறது. ஆனால், மத்திய மாநில அரசுகளின் எந்த சட்டத்தையும் விதிகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

திறமையான ஆசிரியர்கள் வேண்டும் என்பதற்காக, ‘பதிவு மூப்பு” முறை கைவிடப்பட்டு, ‘ஆசிரியர் தகுதி தேர்வு’ மூலமே அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் கூட, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சிறுபான்மை மத நிறுவனங்கள் நடத்தும் எந்த கல்வி நிறுவனங்களிலும் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அவர்களின் மத அமைப்புகளில், பதிவு செய்தவர்களில் பதிவு மூப்பு அடிப்படையிலேயே அனைத்து நியமனங்களையும் செய்கிறார்கள். அரசின் கருவூலத்திலிருந்து இருந்து சம்பளம் பெறுபவர்கள், அரசின் சட்ட திட்டங்கள், விதிகளை துளியும் மதிப்பதில்லை. கேட்டால் நாங்கள் சிறுபான்மையினர். எங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது என்று வாதிடுகிறார்கள்.

திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறை மாவட்டத்தால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஆசிரியர்கள் நியமனங்களில் பிஷப், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் எடுக்க தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருநெல்வேலி சி.எஸ். ஐ. மறைமாவட்டம் அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ. 600 கோடி மானியம் பெறுகிறது. மறை மாவட்டம் நடத்தும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அரசின் கருவூலத்தில் இருந்து பணம் செல்கிறது. ஆனால், பணி நியமனங்களில் அரசின் விதிகள் பின்பற்றப்படுவதில்லை. மறை மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர் நியமனம் நடக்கிறது. இது மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. சி.எஸ்.ஐ. மறை மாவட்டம் பின்பற்றும் விதிமுறைகளால், ஹசீனாவோ, ஹேமாவோ ஆசிரியர்களாக வர முடியாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றம் இப்படி கேள்வி எழுப்பிய பிறகு தான், இது போன்ற பிரச்சனை இருப்பது பலருக்கும் தெரிய வந்திருக்கிறது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மக்கள் பணத்தை வாரி வழங்கும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ‘ஆசிரியர் தகுதி தேர்வு’ மூலமே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் எத்தனை? அதில் சிறுபான்மை மத அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எத்தனை? அவற்றுக்கு தமிழக அரசு வழங்கும் மானியம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது? யாருக்குச் செல்கிறது? என்பது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததால் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அங்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal