திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை படித்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கண்பதி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற ரஞ்சித், வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு மதுஅருந்திக் கொண்டிருந்த சிலர் வெளியூர் காரணுக்கு இங்கு என்ன வேலை? என கூறி ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ரஞ்சித் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீன் குமார், விஜய், சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் மற்றும் கீதாபுரத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென விடியா அரசை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ‘‘நமது விராலிமலை தொகுதி அன்பு நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரஞ்சித் கண்ணன் ஸ்ரீரங்கம் கீதாபுரம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை மதுபோதையில் வந்த சிலர், ‘வெளியூர் காரனுக்கு இங்கு என்ன வேலை?’ எனக்கூறி கட்டையால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்த கல்லூரி மாணவர் தம்பி ரஞ்சித் கண்ணன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென விடியா அரசை வலியுறுத்துகிறேன். இந்த மதுபோதை கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில், 2 சிறுவர்களும் அடங்கியிருப்பது அதிர்ச்சி தரும் வெட்கக்கேடு! ’’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal