திருச்சியில் கரிகாலன் கட்டிய கல்லணை இன்னும் நூறாண்டுகளுக்கு வலுவாக இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட புதிய தடுப்பணை தண்ணீரில் தகர்ந்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி, கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது, நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, பாலத்திற்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டது. மொத்தம், 850 மீட்டர் நீளத்தில், 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், கொள்ளிடம் ஆற்றில் நேற்று, 60,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரோட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல், புதிய தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நீரோட்டம் அதிகரித்து, தற்போது தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பே, தடுப்பணை எவ்வளவு தூரத்திற்கு சேதமடைந்தது என்பது முழுமையாக தெரியவரும். இதற்கிடையே, இந்த தடுப்பணை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரீட் தூண்களும் வெள்ளத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல், சாய்வு நிலைக்கு வந்தது.
மின்வாரிய பணியாளர்கள், மின் இணைப்பை துண்டித்து, மின் கசிவு பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்தனர். எந்த நேரத்திலும், மின் கோபுரம் சாய்ந்து விடலாம் என்பதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, சென்னை – திருச்சி நெடுஞ்சாலை பாலத்தை பயன்படுத்தி வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நல்லவேளை காமராஜருக்குப் பிறகு புதிய அணைகள் கட்டப்படவில்லை…. இந்த கமிஷன் மாநிலத்தில்..!