இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே பச்சைமலைக்கு வருகை தர இருக்கிறார். அவருடன், அவரது நண்பரும், மனசாட்சியும், மந்திரியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வரவிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து உப்பிலியபுரம் முழுவதும் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். இந்த பிளக்ஸ் போர்டை நேருவின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் ஒருவருடைய உத்தரவின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. ‘ஒரே கட்சியில் எதற்காக இந்த பிரிவினை?’ என கேள்விதான் உப்பிலியபுரம் தி.மு.க.வில் தற்போது எழுந்திருக்கிறது. இதுதான் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் ஆதராளர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து தி.மு.க.வில்¢ சில மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘சார், அன்பிலார் குடும்பம் வாழையடி வாழையாக தி.மு.க.விற்கு விசுவாசமாகவும், மூன்றாவது தலைமுறையாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு தகவலை சொல்கிறறன். வலைதளங்களில் கே.என்.நேருவைப் பற்றிய தகவல்கள் அதிகம் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
அதாவது, தி.மு.க.வில் இருந்துகொண்டே, தி.மு.க.வை அழிக்கத் துடித்த சவுக்கு சங்கருடன் அவர் தொடர்பில் இருந்தது தி.மு.க. தலைமைக்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது சவுக்கு சங்கரின் செல்போனை போலீசார் ஆராய்ந்ததில் தி.மு.க.வின் தலைமைக்கே அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும், தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காகவும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை வசம் சிக்காமல் இருக்கவும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ‘கப்பம்’ கட்டியதாகவும் சில மூத்த பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். தவிர, முதல்வரின் காரில் பின் இருக்கையில் கே.என்.நேரு அமர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கே.என்.நேருவே தி.மு.க. தலைமையின் நம்பக்கையை இழந்துவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற பேனர் கிழிப்பு… ஒரே கட்சியில் பிரிவினை வாதம் போன்ற சம்பவங்கள்தான் வருத்தம் அளிக்கிறது’’ என்றனர்.
அமைச்சர் கே.என்.நேருவிடம் நல்லபெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக தி.மு.க. தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்துபவர்களை அடையாளம் கண்டு உள்ளாட்சித் தேர்தலுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் திருச்சி புறநகர் உடன் பிறப்புக்களின் கோரிக்கையாக இருக்கிறது.