தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தவண்ணம் உள்ளன. ஆனால், உதயநிதி ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகுதான் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்கிறது சித்தரஞ்சன் சாலை வட்டாரம்.
‘தி.மு.க.வில் சீனியர்கள் இருக்கும் போது உதயநிதி துணைமுதல்வராவதா?’ என எடப்பாடி பழனிசாமி, எச்.ராஜா உள்பட பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் உதயநிதி துணை முதல்வர் ஆகப் போகிறாராம்.
இதற்கிடையே, வரப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்த பணிகளில் திமுக இப்போதே கவனம் செலுத்த துவங்கிவிட்டது. தற்போது கிடைத்துள்ள இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். இதற்காகவே திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்து அளித்தார். வெற்றிக்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், அவர்களுக்கு ஸ்பெஷல் விருந்து தந்து அசத்தினார் உதயநிதி.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள குறிஞ்சி இல்லத்தில், இந்த விருந்தினை அமைச்சர் உதயநிதி அளித்திருந்தார். இதில், திமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கேஎன் நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, ஆஸ்டின், தாயகம் கவி மற்றும் டாக்டர் கோகுல், மணிமாறன், ஹெலன் டேவிட்சன், அஞ்சுகம், ராணி, முத்துசெல்வி உட்பட 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுமே இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். பிறகு எல்லாரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். அவர்களிம் பேசிய உதயநிதி, ‘‘லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி, 2026 தேர்தலிலும் இப்பணி தொடர வேண்டும், கிராமம் கிராமமாக சென்று திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும், அதே சிந்தனையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்’’என்றும் கொண்டார்.
இந்த கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த விருந்தும், விருந்தில் இடம்பெற்ற ஐட்டங்களும்தான் இணையத்தில் வீடியோவாக வெளியாகி, காண்போரை வெகுவாக ஈர்த்து வருகிறது.. இந்த உணவு வகைகளை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினர் தயாரித்திருக்கிறார்கள்.
சீரக சம்பா மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சிரம் மீன் வறுவல், மிளகு கொத்துக் கோழி, மட்டன் கோலா உருண்டை, சிக்கன் தொக்கு, பரோட்டா, முட்டை தோசை, நாட்டுக்கோழி குருமா போன்ற அசைவு உணவுகள் பரிமாறப்பட்டன. அதேபோல, தயிர் பச்சடி, மாம்பழம் ஸ்வீட் ரோல், முந்திரி பிரட் அல்வா போன்ற ஸ்வீட்களும் விருந்தில் இடம்பெற்றிருந்தன.
அ.தி.மு.க. இணையுமா? இணையாதா? என ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ‘மெகா’ பிளானை கையில் எடுத்து, அதனை சக்ஸஸ் ஆக்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
வேட்பாளர்கள் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் தொகுதி பொறுப்பாளர்கள். அதனால்தான் அந்த பொறுப்பாளர்களுக்கு உதயநிதியே நேரடியாக விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.