‘கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மகனை துணை முதலமைச்சர் ஆக்குவதற்காக’ என்றவர், ‘திருச்சியில் தொழிற்சாலைகள் கட்டுவது என பல ஆயிரம் கோடியில் கே.என்.நேரு புரள்கிறார்’’ என திருச்சியில் ‘தில்’லாக பேசியிருக்கிறார் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார்.
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் நடக்கும் அவலங்கள் குறித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், ‘‘திருச்சி மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய எம்.பி., ரூ.250க்கு ரீசார்ஜ் பண்ணிவிட்டு போனவர்தான் ஆளையேக் காணோம். ஆனால் மக்களின் பிரச்னைக்காக நாம் போராட வேண்டியிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, மக்களை ஏமாற்றி விட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்பதே கிடையாது. ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சியில் எப்போதும் மின்வெட்டுதான். எடப்பாடியார் ஆட்சிகாலத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முணை மின்சாரம் வழங்கப்பட்டதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதே போல், மாதம் ஒருமுறை மின் கட்டணம் ரீடிங் எடுக்கப்படும் என்றார். இதனால், ரூ.6 ஆயிரம் மிச்சப்படும் என்றார்கள். ஆனால், தற்போது மாதம் ஒருமுறை மின்கட்டணம் ரீடிங் எடுக்கப்படுகிறதா? தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு முறை மின்கட்டணத்தை ஏற்றியிருக்கிறார்கள். இதையெல்லாம் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் செல்வதற்கு முன்பு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால், வறுமை ஒழிக்கப்பட்டதா இல்லையே? முதல்வர் குடும்பத்தில்தான் வறுமை ஒழிக்கப்பட்டு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்னது போல் 30 ஆயிரம் கோடி ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர். ஆனால், திருச்சி மக்களுக்கு ரூ.250 ரீசார்ஜ் செய்ய கொடுத்து ஒருவர் எம்.பி.யாகிவிட்டார்’’ என்றவர், அடுத்துதான் கே.என்.நேருவை ஒரு பிடிபிடித்தார்.
திருச்சியைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் பேசமாட்டார்கள். ஆனால், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவை ‘தில்’லாக ஒருபிடி பிடித்தார். அதாவது, ‘‘தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவரது கல்லூரி வங்கிக் கடனில் தத்தளித்தது. அந்தக் கல்லூரியை வங்கி ஏலத்திற்கு கொண்டுவந்தது. தற்போது, அந்தக் கடனை எல்லாம் அடைத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டார் கே.என்.நேரு.
இன்றைக்கு விராலிமலை சாலையில் புதிய தொழிற்சாலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த தொழிற்சாலைகள் எல்லாம் கே.என்.நேருவிற்கு சொந்தமானது. இன்றைக்கு பெரம்பலூர் தொகுதியில் எம்.பி. வேட்பாளராக போட்டியிட்ட மகனை வெற்றி பெற வைக்க கே.என்.நேரு எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தார் என்பது மக்களுக்கு தெரியும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின், கே.என்.நேரு, ஆகியோரின் வறுமைதான் போயிருக்கிறது. இன்றைக்கு இவர்கள் எல்லாம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி. அதே போல் இங்கிருக்கின்ற வட்டச் செயலாளர்கள், சேர்மன்கள் உள்ளிட்டவர்களின் வறுமையும் போயிருக்கிறது’’ என தி-.மு.க.வை கடுமையாக சாடிப் பேசினார் முன்னாள் எம்.பி., ப.குமார்.
திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.