பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலுவின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்குமாறு அவரது மனைவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.
வட சென்னை பகுதியில் முக்கிய தலைவராக இருந்தவர் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் தான் கட்டி வரும் வீட்டை ஆம்ஸ்ட்ராங் பார்வையிட்டு வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை திட்டம் தீட்டி கொலை செய்ததாக கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் போலீஸ் காவலில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறி போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்த என்கவுன்டரால் ரவுடிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக போலீஸ் காவலில் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி ஆற்காடு பொன்னை பாலு, அருள் உள்ளிட்டவர்கள் உயிருக்கு பயந்துள்ளனர். இந்தநிலையில் பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பியும், பிரபல ரவுடியுமான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி விஜயசாந்தி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பொன்னை பாலுவிற்கு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையின் என்கவுன்டரில் அடுத்ததாக பொன்னை பாலு சிக்க கூடும் என்ற அச்சத்தாலும் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.