‘அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்னும் குரல் தொடர்ந்து அதிமுகவுக்குள்ளும், வெளியிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. ஒருபக்கம் சசிகலா பல ஆண்டுகளாகவே அதிமுக ஒருங்கிணைப்புப் பற்றி பேசி வந்தார். தற்போது இது கட்சிக்குள்ளும் கேட்க தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து எம்.பி தேர்தலில் தோல்வியைச் சந்தித்தவுடன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தீவிரமாகப் பேசி வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில், இதற்கு முன்னதாக, ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறி கேசி பழனிச்சாமியோடு இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்பதை நிறுவினர். இப்படியாக அதிமுக ஒருங்கிணைப்பு என்பது கடந்த சில தினங்களாக ஒலித்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10-ம் தேதி நடந்தது.’ கூட்டத்திற்கு முன்பே ஒருங்கிணைப்புக் குறித்து யாரும் பேசக் கூடாது’ என ஆர்டர் போட்டார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புப் பற்றி எந்த சத்தமும் இல்லை என்னும் தகவல் சொல்லப்பட்டது. அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்காதது குறித்தும் பலரும் கருத்து தெரிவித்தனர். அதன்பின் தான், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமையும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்’ எனக் கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கோட்டையன் வீட்டு விழாவில் அதிமுகவின் முக்கியமான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் இறங்கினர். அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்ற பெற முடியும் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லை.
இந்த ஒருங்கிணைப்புக் குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியவை அல்ல. அதிமுக 2021-ம் ஆண்டு தேர்தலின்போது டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கை வந்தது. ஆனால், அதனை மறுத்தார் பழனிசாமி. அதன்பின், உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அதுமட்டுமில்லாமல், பாஜக போன்ற தேசிய கட்சிகளை இங்கு வளரவிட பழனிசாமி வழி செய்துவிட்டாரோ என்னும் சந்தேகம் பல அதிமுக தொண்டர்களுக்கும் எழுந்தது. குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை போன்ற அதிமுக கோட்டையிலும் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இப்படியாக பழனிசாமியின் முடிவுகள் தொடர் சறுக்கலைச் சந்தித்தன. அதன்பின் இந்த ஒருங்கிணைப்புக் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது (கட்சிக்கு உள்ளும் வெளியிலும்).
தேர்தலில் தோல்வியைத் தவிர்க்க ஒருங்கிணைப்பு அவசியம் என அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூறியும் ஏன் தயக்கம் காட்டுகிறார் பழனிசாமி? அது தயக்கமில்லை, அதன்பின் அவரின் வியூகம் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தேடி தந்தது பலமான கூட்டணிதான். அதனால்தான், 2026-ம் ஆண்டுக்குள் பலமான கூட்டணியை அமைக்க திட்டமிட்டிருக்கிறார் பழனிசாமி. இதே கருத்தை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பேசியுள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது. கடந்த தேர்தலில் பாமகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பாமக.
ஆகவே, 2026-ல் பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததாக சொல்லப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில், ”அதிமுக தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். பாமகவுக்கு வாக்களிக்களியுங்கள்” எனப் பேசினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது வரும் தேர்தலில் ’பாமக – அதிமுக’ இடையிலான கூட்டணியை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துகளையும் புறந்தள்ள முடியாது.
அதேபோல், திமுகவில் கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்கவும் அதிமுக திட்டமிட்டது. கடந்த தேர்தலின்போதே அதற்கான வேலைகளைச் செய்தது அதிமுக. குறிப்பாக, அதிமுக தூது அனுப்பியதை மேடையிலேயே போட்டு உடைத்தார் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன். ஆனால், அப்போது பழனிசாமியின் வியூகம் கைகொடுக்கவில்லை.
ஆகவே, இப்படியாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதன்வழி நடக்க திட்டமிட்டிருக்கிறார் பழனிச்சாமி. ஆனால், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் விதமாக கட்சியை ஒருங்கிணைக்க வேண்டுமென முக்கியமான நிர்வாகிகள் பேசுகின்றனர். ஒருவேளை, அதிமுக ஒருங்கிணைந்தால் தன் தலைமைக்கு ஆபத்து ஏற்படும் என நினைக்கிறார் பழனிசாமி. காரணம், கடந்த 10 தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அப்போது தலைமை பதவியில் இருந்தவர் பழனிசாமி தான்.
ஆனால், ஒருங்கிணைப்புக்குப் பின் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தால் பிற தலைவர்களின் வருகைதான் காரணம் என்னும் கருத்து முன்வைக்கப்படும். அதுமட்டுமில்லாலம், பிறரின் கை கட்சிக்குள் ஓங்க வாய்ப்பிருக்கிறது. அதனால், தனியாளாக நின்று இந்தக் கூட்டணி கணக்கை வெற்றியடைச் செய்ய வேண்டுமென நினைத்துதான் இவர்களின் ஒருங்கிணைப்புக் கோரிக்கையை நிராகரித்து வருகிறார் பழனிச்சாமி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஆனால், ஜானகி கடிதம் எழுதி ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றதுபோல, சசிகலா கடிதம் கொடுத்தால் பார்க்கலாம் என்பது போல பேசினார் பழனிசாமி. ஆம், எப்படியாக இருந்தாலும், சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் வாய்ப்பை வழங்கினார். அதனை சரியாகப் பயன்படுத்தி கட்சி, ஆட்சி என இரண்டையும் தன் கன்ட்ரோலில் வைத்திருந்தார் பழனிசாமி என்பது வேறு கதை.
அதுதவிர, சசிகலா எதிர்ப்பார்ப்பது கட்சி அதிகாரம்தானே தவிர, ஆட்சி அதிகாரத்தில் தலையை நுழைக்க மாட்டார் என நினைக்கிறார் பழனிசாமி. ஆனால், அதுவே டிடிவி, ஓபிஎஸ் என இருவருமே ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பார்கள். இந்த அதிகாரப் பகிர்வு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். அதனால், ஒருங்கிணைப்பை ஏற்க மறுக்கிறார் பழனிசாமி என்னும் வாதமும் வைக்கப்படுகிறது.
தவிர, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் அவ்வளவு எளிதாக எடப்பாடியால் கொண்டுவர முடியாது என்கிறார்கள். காரணம், பா.ஜ.க. பா.ம.க.வை அவ்வளவு எளிதில் விட்டுவிடாது, மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில். அதே போல் விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. காரணம், தி.மு.க., அ.தி.மு.க. இரண்டில் இணைந்தாலும், அக்கட்சிக்கு எதிர்காலம் இருக்காது.
எனவே, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முன்வருவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது. அதையும், மீறி அவரது திட்டம் கைக்கொடுக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்..!