தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பூர் பகுதியில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் 8பேர் இந்த கொலையில் சரண் அடைந்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து வந்த கூலிப்படையினர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்டிராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் ஆகியோர் வந்தனர். இந்நேரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு இருவரும் பேட்டி அளித்தனர்.

செல்வபெருந்தகை அவரது பேட்டியில்; ஆம்ஸ்டிராங் மிக பலசாலி, தைரியம் கொண்டவர், பல பயிற்சிகளை கற்றவர். அவரை நேருக்கு நேர் யாரும் மோதி ஜெயிக்க முடியாது. கோழைகள் பலர் பின்புறமாக வந்து தாக்கி கொலை செய்திருக்கலாம். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் எங்கள் தலைவர் ராகுல் பேசி ஆறுதல் கூற வேண்டும் என கேட்டார். அவர்களிடம் பேச முயற்சிகள் எடுத்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும். தமிழக முதல்வர் நல்ல நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சமூகவிரோத கும்பல் செய்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். மறைந்த ஆம்ஸ்டிராங் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றி அரசியல் பணியாற்றி வந்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்காக உழைத்தவர். கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் யாரும் உண்மை குற்றவாளிகள் அல்ல. இதில் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும். வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும். கூலிப்படை, சாதிவாதகும்பல், கொலைக்கார கும்பல்களை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுபிடித்து கட்டுப்படுத்த தவறினால் தமிழக அரசுக்கு மேலும் களங்கம் உருவாகிவிடும் என்பதை எங்கள் கட்சி சுட்டி காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal