‘கோட்’ பட எதிர்ப்பை சமாளிக்கவே விஜய் நீட் எதிர்ப்பைக் கையிலெடுத்திருக்கிறார்!’ என தமிழக – பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக – பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் விஜய் நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் “கோட்” படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் அச்சுறுத்தலை தவிர்க்க திமுக அரசின் முடிவுக்கு திடீர் ஆதரவு எடுத்தது ஆபத்தான சுயநல அரசியல்.

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் விஜய் சமீபத்தில் பேசியது உண்மையும் புரிதலும் இல்லாத அரசியல் சந்தர்ப்பவாதத்தின் அப்பட்டமான உதாரணம். தமிழக மாணவர்களின் கண்களை பறிப்பது போன்ற தவறான கருத்துக்களை தெரிவித்தது துரதிஷ்டவசமானது.

நீட் தேர்வின் பலன்களை அறியாமல், நீட் தேர்வால் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆனதை மறந்து அவர்களின் லட்சியங்களை புறக்கணித்து, தவறான தகவல்களை, மாணவ சமுதாயத்தின் இடையே பெற்றோர்களிடையே அரசியல் சுய நலத்துக்காக பரப்பியிருக்கிறார் விஜய். இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு குறித்து பொய்களை பரப்பி, தமிழகத்தின் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து நடிகர் விஜய் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒரு பக்கம் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருள் கொடுத்து ஊக்கப்படுத்துவது போல், மாணவர்களை வைத்து தன்னுடைய அரசியலை கட்டமைக்கும் விஜய் தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக நீட் தேர்வு பொய்களைப் பேசி மாணவர்களின் பெற்றோர்களையும் குழப்பி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

விஜய், நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அரசியல் ஆதாயத்திற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டார். அவர் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், தான் நடித்து வெளிவர இருக்கும் கோட் திரைப்படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் நிலையை மட்டும் கருத்தில் கொண்டு, தன்னுடைய கடைசி படமாக அறிவித்து அதில் பல நூறு கோடி ரூபாய் வருமானத்தை சம்பாதிப்பதற்கு வழி தேடும் வகையில் நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தை பயன்படுத்துகிறார்.

தமிழகத் திரைப்படத் துறையில் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய முயலும் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அறிவிக்கப்படாத அச்சுறுத்தல்களை திமுக அரசால் சந்தித்துக் கொண்டு வருகிறார்கள். திமுக அரசுக்கு எதிரான நிலை கொண்ட நடிகர்கள் படத்தை தமிழகத்தில் திரையிடவே முடியாது. திமுக குடும்பத்து பினாமிகளின் மூலமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த தியேட்டர்கள் மறைமுகக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

கடந்த முறை விஜய் திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகள், இந்த முறை ஏற்படாமல் பாதுகாப்பாக தன்னுடைய திரைப்படம் வெளிவர வேண்டும் பல நூறு கோடி ரூபாய் வசூலும் கிடைக்க வேண்டும் என்ற தொழில் சார்ந்த திட்டத்தின் அடிப்படையில், திமுக அரசை பகைத்துக் கொள்ளாமல், தன் “கோட்” படத்திற்கு அவருடைய முழுமையான ஆதரவை பெற வேண்டி நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

திமுக அரசால் நீட் தேர்வு குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, நீட் தேர்வின் சிறப்பம்சம் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளை விஜய் அறிவாரா? நீட் தேர்வு வந்த பிறகுதான், பணக்காரர்கள் மட்டுமே படித்து வந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற ஏழை அரசு பள்ளி மாணவர்கள், நகரங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க மத்திய மோடி அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நடிகர் விஜய் உணர வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து தங்கள் கனவை நனவாக்கிய அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலை தமிழக அரசிடம் இருந்து நடிகர் விஜய் வாங்கி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் திமுகவுடன் சேர்ந்து தானும் மாணவர்களை ஏமாற்றி நடித்து தவறான பொய் பிரச்சாரத்தை செய்யும் நீட் எதிர்ப்பு நாடகத்தை முடிவுக்கு கொண்டு வரமனசாட்சியுடன் செயல்படுவார்.

பொய்களை பரப்பி,தகுதியான மாணவர்களுக்கு நீட் உருவாக்கிய வாய்ப்புகளை புரிந்து கொள்ளாமல் , மாணவர்களையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தாமல் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில் நடிகர் விஜய் செயல்பட வேண்டும். நீட் ஏழை மாணவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது, தகுதி அடிப்படையிலான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது . சமூக பொருளாதாரத்தில் சாதி அடிப்படையில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து திறமையான மாணவர்கள் தரமான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை அனைவருக்கும் இணையாக பெறுவதற்கான வாய்ப்புகளை சமமாக உருவாக்கி உள்ளது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றி அரசியல் சட்டத் திருத்தத்தை முன்மொழிய வேண்டும் என்ற விஜய்யின் கருத்து, நீட் தேர்வின் பலன்கள் குறித்த அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.

நீட் தேர்வு வந்த பிறகு அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவு பயன் அடைந்துள்ளனர். அந்த உண்மையை மறைத்து திமுக அரசு அரசியல் சுயநலத்திற்காக உருவாக்கிய போலி பிம்பம் பற்றி அறியாமல் ,உண்மையை உணராமல் கருத்துக்களை தெரிவிக்கும் நடிகர் விஜய் நீட் தேர்வால் பயனடைந்த மாணவர்களின் எண்ணற்ற வெற்றிக் கதைகளை அறிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு குறித்த உண்மைகளை உணர்ந்து, நீட் தேர்வை கொண்டாடி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களின் வெற்றிகளைக் கொண்டாடி அவர்களை பரிசு கொடுத்து ஊக்குவிக்க விஜய் முன் வர வேண்டும். அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க நீட் தேர்வு குறித்த முழுமையாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

தன் அடுத்த படமான கோட் வெளியீட்டில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக… மாணவர்களின் எதிர்காலம் எந்த பாதிப்புக்கும் உள்ளாகலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் விஜய். பரிசு கொடுக்கிறோம் என்ற பெயரில் மாணவர்களின் எதிர்காலத்தை தரிசாக்கும் வேலையைச் செய்கிறார் விஜய். அவரை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal