‘‘ எனது உரையின் சில வரிகள் நீக்கப்பட்டது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது’’ என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: ‘‘ஜூலை1, 2024 அன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எனது உரையிலிருந்து சில வரிகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் இக்கடிதத்தை எழுதுகிறேன். சில கருத்துகளை நீக்குவதற்கான அதிகாரங்கள் சபாநாயகருக்கு உண்டு. லோக்சபாவில் நடைமுறை மற்றும் நடத்தை விதி 380 ல் குறிப்பிடப்பட்டு உள்ள வார்த்தைகளை மட்டுமே நீக்க முடியும். ஆனால் எனது உரையின் கணிசமான பகுதிகள் வெறுமனே நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த வார்த்தைகள் விதி 380 ல் வராது.
நான் அவையில் தெரிவித்தது யதார்த்தமானது. உண்மை நிலை. அரசியல் சாசன சட்டம்105(1) ன்படி, எம்.பி.,க்கள் ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் நேற்று நான் செயல்பட்டேன்.
எனது பேச்சின் சில வரிகள் நீக்கப்பட்டது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆனால், அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியே பேசினார். ஆனால், ஆச்சர்யமாக ஒரு வார்த்தை மட்டும் தான் நீக்கப்பட்டு உள்ளது. அவை குறிப்பில் நீக்கப்பட்ட கருத்துகளை மீண்டும் சேர்க்க வேண்டும்’’ இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.