வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மறைமுகமாக கைப்பற்றி உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் அனைத்தையும் அந்நிறுவனமே கைப்பற்றி ரிலீஸ் செய்து வந்தது. அதிலும் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் வெளியிட்ட படங்கள் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டியதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் அஜித், விஜய், சூர்யா, கமல், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் அதை ரெட் ஜெயண்ட் தான் வெளியிடும் என்கிற நிலை இருந்த நிலையில், அதிலிருந்து முதல் ஆளாக வெளிவந்த ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான். அவர் நடித்த பீஸ்ட் படத்துக்கு பின்னர் ரெட் ஜெயண்ட் வசம் தன் படத்தை கொடுப்பதை தவிர்த்து வருகிறார். இருப்பினும் விஜய் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களிடம் இருந்து ஓரிரு ஏரியா ரிலீஸ் உரிமையை மட்டும் கைப்பற்றி ரெட் ஜெயண்ட் வெளியிட்டு வந்தது.

விஜய்யின் வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் வெளியிட்டது. ஆனால் அந்நிறுவனத்திடம் இருந்து வாங்கி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆற்காடு உள்ளிட்ட ஏரியாக்களில் மட்டும் ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்தது. அடுத்து லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமே ரிலீஸ் செய்ததால் அது ரெட் ஜெயண்ட் கைவசம் செல்லவில்லை. இப்படி தொடர்ந்து விஜய் ரெட் ஜெயண்டை ஒதுக்கி வரும் நிலையில், கோட் பட ரிலீஸ் உரிமையை அந்நிறுவனம் மறைமுகமாக கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

கோட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி உள்ளாராம். அவர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட, அவர் மூலம் கோட் படத்தை வாங்கி ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் கோட் படத்தை மறைமுகமாக ரிலீஸ் செய்வதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal