‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழக்க காரணமான குற்றவாளிகளை ஆளும் தி.மு.க., அரசு பாதுகாக்கிறது’ என பா.ஜ.க, தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ‘‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தை சேர்ந்தோர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க., அரசு தொடர்ந்து அவர்களை பாதுகாத்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் முன்பு நடந்தபோதும் அரசு திருந்தவில்லை. கள்ளச்சாராய கும்பலுக்கும் தி.மு.க., தலைவர்களுக்கும் பங்கு உள்ளது. இதனால் வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்து விசாரிக்க வேண்டும். தமிழக மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் முத்துசாமி கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரசின் ராகுலும், பிரியங்காவும் இந்தப் பிரச்னை குறித்து பேசவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான அவர்களுடைய அக்கறை இவ்வளவுதான்’’இவ்வாறு அவர் கூறினார்.