சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தினசரி தீவிரமாக சோதனை செய்கிறார்கள். கடுமையான சோதனைக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து பயணிகள் சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.

இந்த சூழலில் வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் குறிப்பிட்ட சில விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அப்படித்தான் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அதில் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தார்கள். அப்போது அதிகாரிகளிடம் அந்த பயணி முன்னுக்குபின் முரணாக பேசினார்.

இதனால் அவரது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர், உள்ளாடைக்குள் தங்க சங்கிலிகள் மற்றும் வளையல்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள 710 கிராம் தங்கம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த பெண் பயணியும் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்தார். அவர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பெண் பயணியின் உடைமைகளை தனியாக சென்று சோதித்த போது அதில் ரூ.56 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 900 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து இருப்பது தெரிந்தது. அவற்றையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இதேபோல் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சோதனை செய்தனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவதை அறிந்த பயணி ஒருவர். தான் கடத்தி வந்த 1 கிலோ 56 கிராம் எடையுள்ள தங்கப்பசை அடங்கிய 4 பார்சல்களை விமான நிலைய சுங்கச் சோதனை பகுதியில் வீசிவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்சல்களில் இருந்த ரூ.66 லட்சத்து 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் ஒரே நாளில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ,1 கோடியே 67 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புடைய 2.66 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மலேசிய பெண் உள்பட 2 பேர் கைதாகி உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை வீசி விட்டு தப்பி ஓடிய மற்றொரு பயணியை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal