தமிழக சட்டசபையின் 3வது கூட்டம் இன்று காலை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பற்றி விவாதிக்க கூறி கேள்வி நேரத்தில் அதிமுகவினர் அமளி செய்தனர். சபாநாயகர் அப்பாவு விவாதிக்க அனுமதி மறுத்ததால் கருப்பு சட்டையுடன் வந்த எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் என்பது ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். அதன்பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 19ம் தேதி பொது பட்ஜெட்டும், 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து துறை வாரியா மானி கோரிக்கை மீதான விவாதத்துக்காக ஜுன் 20ல் சட்டசபை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்துடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் என இருவேளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் தமிழக சட்டசபை கூடியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்பிறகு நேற்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. நீர்வளத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்டவற்றின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அதிமுகவினர் கோஷமிட்டனர். இதனால் அவர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இன்று 2வது நாளாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கிய நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, ‛‛சட்டசபைக்கு என்று மாண்பு உள்ளது. விதிகள் உள்ளது. முதலில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும். அதன்பிறகு பூஜ்ஜிய நேரத்தில் கள்ளக்குறிச்சி பற்றி விவாதிக்க அனுமதிக்கப்படும்’’ என்று கூறினார். ஆனால் அதிமுகவினர் கேட்கவில்லை. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. முதல் ஒருமணிநேரம் கேள்வி நேரமாகும். அதன்பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அதன்பிறகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal