விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், விக்கிரவாண்டியில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 64 பேர் போட்டியில் உள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி வேட்பு மனு தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைந்தது. இன்றுடன் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 64 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் கூறியதாவது:-

‘‘ஒரு 2 வருட காலமாக எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தால் முடியாது. அதிகாரமும் இருக்க வேண்டும். அது இருந்தால் தான் நிறைய மக்களுக்கு நாம் சேவை செய்ய முடியும். என்னுடைய முழு நோக்கமே மக்களுக்கு சேவை செய்யனும். நான் பட்ட துயரைத்தை மக்களும் படக்கூடாது என்ற முழு நோக்கத்தோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு மடிப்பிச்சையாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நியமித்து அப்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் ஏராளமானோரை கைது செய்தனர்.

இந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் தாய் போட்டியிடுவது சீமான், பா.ம.க., போன்ற கட்சிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal