ஒன்றிய அரசு, தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டிப்பதோடு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கண்டிப்பான நடவடிக்கையை மேற்கொண்டு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை, கோட்டை பட்டினத்திலிருந்து சென்ற ஏராளமான மீனவர்கள் நேற்று நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களை கைது செய்து மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகையும் பறிமுதல் செய்து சென்றனர். இதனால் தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து வாழ்வாதாரத்தை தொடர சென்ற ஆரம்பக்கட்டத்திலேயே இலங்கை கடற்படையினரின் அராஜகம் மீனவச்சமுதாயம் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மீனவர்களிடையே ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

ஆகையால் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும், மீன்பிடி படகுகளையும் மீட்க வேண்டியது மத்திய அரசின் கடமை. குறிப்பாக ஜூன் 20, (இன்று) வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் இலங்கை செல்ல இருப்பதால், தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் இது போன்ற சம்பவம் இனியும் நடைபெறாத வண்ணம் கண்டிப்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal