‘உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடியோ பதிவு குறித்து தவெக விமர்சித்துள்ளது.

மிசா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார்.

அதற்கு பதிலளித்த தவெக ஐடி விங்க், ‘பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?

எதை உலகறியக் கூடாது என்று கருணாநிதி முதல் உதயநிதி வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் தடுப்புக் காவல் நகல் (detention copy) பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.

உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல கட்-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.

கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப் பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் வீடியோ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal