தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இதற்கிடையே தான் மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளது. தற்போது சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இதற்கு பதிலாக அனைத்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தை ஆளும் முதல்வர் ஸ்டாலினின் திமுகவும் இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு முக்கிய கடிதம் எழுதப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து தமிழக அரசு தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
