வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலோடு அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதிவிடும் என தி.மு.க.வின் செய்தி தொடர்புகுழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி என முதலில் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் பா.ஜ.க.வுடன் இனி எந்த காலமும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்றார். ஆனால், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘அழுத்தத்தினால்’ பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ பா.ஜ.க.விடம் அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி’ என கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில்தான் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘அ.தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் துவங்கி ஒன்பது தேர்தல்களில் வென்றவர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க. அரசில் பத்து முறை பட்ஜெட் போட்டு நிதி அமைச்சராகவும், மூன்று முறை முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அ.தி.மு.க.வே என் மூச்சுக்காற்று என 33 வருடம் அ.தி.மு.க.வையே சுவாசித்து வாழ்ந்து வந்தவர் சசிகலா.
இவர்கள் மூவரையும் திட்டமிட்டு நம்ப வைத்து நடுரோட்டில் நிறுத்தியது பா.ஜ.க.! இப்போது எடப்பாடி பழனிசாமியை பிணை கைதியாக்கி, வரும் சட்டசபைத் தேர்தலோடு அ.தி.மு.க.வுக்கு மொத்தமாக முடிவுரை எழுதப்போகிறது பா.ஜ.க.’’ என பதிவிட்டிருக்கிறார்.
