திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் பார்லியில் மனு கொடுத்தனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்ற கிளை பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், தீபத்தை மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

இருப்பினும், தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் விசாரித்தனர். இரு தரப்பு விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் வேறு சில முக்கிய விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளனர். இந்து, முஸ்லிம் சமூகங்கள் தங்கள் திருவிழாக்களை ஒருவருக்கொருவர் இடையூறின்றிக் கொண்டாடத் தேவையான வழிகாட்டுதல்களைத் தங்களது விரிவான தீர்ப்பில் வழங்கியுள்ளதாகவும் அதைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. நீதிபதிகள் அளித்த விரிவான தீர்ப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மேலும் பல முக்கிய பாயிண்டுகள் இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும், அங்குத் தொன்மையான சின்னத்தைப் பாதுகாக்கும் தொல்லியல்துறை நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தீபத்தூணில் விளக்கேற்றும் நிகழ்வின்போது அங்குச் செல்லப் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்ற நீதிபதிகள் இதனை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.

உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது இந்து பக்தர்களுக்கு ஒரு பொதுவான மற்றும் நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற வழக்கம் இருக்கும் போது, பக்தர்களின் கோரிக்கையைக் கோயில் நிர்வாகம் ஏற்க மறுக்க எந்த நியாயமான காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. தீபம் ஏற்றப்பட்டால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்ற மாநில அரசின் வாதம், வெறும் கற்பனையே என்று அமர்வு கடுமையாக விமர்சித்தது. இவை சமூகத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இறுதியாகத் தீபத்தூணில் கோயில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மலை உச்சியில் இருக்கும் குறிப்பிட்ட அந்தத் தூண் சர்வே தூண் தான் என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த வாதத்தை ஐகோர்ட் மதுரை அமர்வு ஏற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. அதேநேரம் மலை உச்சியில் எப்போது தீபத்தை ஏற்க வேண்டும் என்பது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் நீதிமன்றம் கூறவில்லை. இதனால் அடுத்தாண்டு கார்த்திகை மாதமே தீபம் ஏற்றப்படும் எனத் தெரிகிறது.

‘‘தீபத்தூணில் தீபம் ஏற்றினால், இஸ்லாமியர்கள் தவறாக எண்ணிக் கொள்வார்களே, ஓட்டுக்கள் போய் விடுமே’’ என்ற கற்பனையான அச்சத்தில், திமுக அரசு தவறான முடிவுகளை எடுத்தது. மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீதும் திமுகவினர் அவதூறு பரப்பினர். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு, அட்டூழியம் செய்தனர். பார்லிமென்டிலும் பிரச்னை கிளப்பினர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு செல்லும் என்றும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ‘தனி நீதிபதி உத்தரவு போட்ட அன்றே தீபம் ஏற்றி இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இது, தமிழக அரசுக்கும், அதன் தவறான முடிவுகளுக்கு ஜால்ரா அடித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் வைக்கப்பட்ட ‘குட்டு’ என்கின்றனர், மதுரை மக்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal