ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி அ.தி.மு.க. என இரண்டு தரப்பிடமும் கூட்டணி குறித்து பிரேமலதா பேசி வருவதாகவும், யார் ராஜ்யசபா சீட் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் இந்த 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.

திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு சாதகமாக கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உள்ளன. இதில் தொகுதி பங்கீடு மட்டும் பேசப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோஷம் எழுந்தாலும், இறுதி முடிவு திமுகவின் கைகளில்தான் உள்ளது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, ஐஜேகே போன்ற கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
மேலும் பாமகவும் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மட்டும் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வருகிறது. கூட்டணி தொடர்பான முடிவை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
திமுகவும் அதிமுகவும் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சரியாக நடைபெறாததால் தான் முடிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் அதிக தொகுதிகள் பெறும் நோக்கத்துடன் தேமுதிக மூன்று முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, மற்றும் தமிழக வெற்றி கழகத்துடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எந்தக் கட்சி அதிக சீட்டுகளை வழங்குகிறதோ, அதனுடன் சேர்ந்தே தேமுதிக கூட்டணி செல்லும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில்தான் தேமுதிக கூட்டணி குறித்த இறுதி முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்துள்ளார். இன்று நடைபெறும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அமித்ஷா டெல்லி திரும்புவதற்கு முன் தேமுதிக கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாவட்ட செயலாளர்களுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தி.மு.க.வுடனா? அ.தி.மு.க.வுடனா… யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் பிரேமலதா விஜயகாந்த். இரு கட்சிகளும் தே.மு.தி.க.வை பெரிய அளவில் கண்டுகொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!
