தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 38 தொகுதிகளையும் 3 அமைச்சர் பதவிகளையும் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. ‘இந்தமுறை 18 தொகுதிகள்தான் கொடுக்க முடியும். நாங்கள் தலைமையிடம் பேசிக்கொள்கிறோம்’ என சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தரப்பில் 38 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், அமைச்சரவையில் 3 துறைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலின் தரப்பு நேரடியாக டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தரப்பில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. அப்படி இல்லையென்றால் தவெகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே பேச்சுகள் எழுந்துவிட்டன.

ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களோ திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால் பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் தவெகவுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் தலைமை சார்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தரப்பில் 38 தொகுதிகளும், அமைச்சரவையில் 3 துறைகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்துவிட்டு ஸ்டாலின், திமுக தரப்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்று பதில் அளித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த வாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது. அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு ஸ்டாலின் செய்தி அனுப்பி இருக்கிறார். இதன்பின் காங்கிரஸ் நிர்வாகிகளை அனுசரித்து போக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது செல்வப்பெருந்தகை கூட, காங்கிரஸ் தலைமையுடன் திமுக பேசி வருகிறது என்று கூறி இருந்தார். இதன் காரணமாகவே கிரிஷ் சோடங்கர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது வதந்தி என்று வெளிப்படையாக அறிவித்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 28 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 தொகுதிகளில் வென்றது. ஆனால் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெல்வதற்கு காங்கிரஸ் வேட்பாளரே காரணம் என்றும் கூறப்பட்டது. இதனால் இம்முறை தொகுதி பங்கீட்டில் திமுக இறுக்கிபிடிக்கும் என்று தெரிகிறது.

தவிர, தே.மு.தி.க.வுடன் ‘தீபம்’ மாவட்ட அமைச்சர் பேசி வருகிறாராம். தே.மு.தி.க. தி.மு.க. கூட்டணியில் இணையும் பட்சத்தில் 18 தொகுதிகள்தான் காங்கிரசுக்கு ஒதுக்கமுடியும் என கறாராக சொல்லிவிடுங்கள் என தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்களிடம் கூறியிருக்கிறாராம்.

இந்தியாவிலேயே காங்கிரசை முதுகில் சுமந்துகொண்டிருக்கும் ஒரு மாநிலக்கட்சி திமுக என்பதையும் ‘மேலிடத்திற்கு’ நினைவூட்டுங்கள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறாராம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal