அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பொங்கலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என தவெக ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணையக்கூடிய நிகழ்வு பொங்கலுக்குள் நடைபெறும். ஒவ்வொரு இயக்கமும் கூட்டணி சேர்வது அவர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டணிக்கு விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அதை தலைவர் முடிவு செய்வார். ஓபிஎஸ் அணியிலிருந்து பிரபாகர் இணைந்துள்ளார். மற்றவர்கள் எப்போது இணைகிறார்கள்.? என்பது பொங்கலுக்குள் தெரியவரும். விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களை கூட்டணியில் சேர்ப்போம்’’ இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

‘ஓபிஎஸ், டிடிவி இன்னும் அதிமுகவை ஒருங்கிணைப்போம் என சொல்லி வருகிறார்கள்.? அது சாத்தியமா?’’ என்ற கேள்விக்கு, ‘‘பொறுத்திருந்து பாருங்கள். எப்படி இணையப் போகிறார்கள், யாருடன் இணையப் போகிறார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal