திமுக கூட்டணியில் ஓ.பி.எஸ். இணையவேண்டும் என அவருடன் இருக்கும் மூத்த நிர்வாகிகள் வற்புறுத்தி வரும் நிலையில், அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் எடப்பாடிக்கு எதிராக கர்ஜத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று கூறிய ஓபிஎஸ், அமித்ஷாவுடன் தமிழக அரசியல் சூழல் தொடர்பாக மட்டுமே பேசினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசப்பட்டு வந்தாலும், ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அமமுகவை கூட்டணியில் இணைக்க பாஜக முயன்று வருகிறது.

இருவருமே என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தாலும், அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணாமலை தன்னுடன் பேசி வருவதாக கூறி இருந்தார். அதேபோல் டிசம்பர் மாதத்தில் டெல்லி சென்ற ஓபிஎஸ், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனிடையே ஓபிஎஸ் கூடாரத்தில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமானார். தொடர்ந்து நேற்றிரவு முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

இதனால் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் விரைவில் முடிவு எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், நாங்கள் ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி வந்துவிட்டோம். அமித்ஷாவை சந்தித்த போது, தமிழக அரசியல் சூழல் தொடர்பாக ஆலோசித்தோம். அதேபோல் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் சிதறுண்டு போகக் கூடாது. அதிமுகவின் சட்டவிதியை சின்னாபின்னமாக்கி இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர்களால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் கொண்டு வந்தார். அதனால் எங்களின் சட்டப் போராட்டம் தொடரும். மொத்தமாக 6 வழக்குகள் இருக்கிறது. சிவில் சூட்டில் என்ன தீர்ப்பு வருகிறதோ, அதுதான் முக்கியமானது. அதேபோல் தவறு செய்தவர்களுக்கு தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ‘பாடம் புகட்டவேண்டும்’ என்பதில் தெளிவாக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal