கடந்த 2025ம் ஆண்டு ‘பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் கொடுக்கவில்லையே?’ என மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டதற்கு, ‘தேர்தல் வந்தால் கொடுப்போம்’ என்றார். ஆனால், 2026ல் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. ஆனால், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் கொடுப்பார்களா? கொடுக்கமாட்டார்களா? என்ற விவாதம்தான் பட்டிதொட்டியெங்கும் பேசப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் ரொக்க பணத்தை வழங்கினார்.இதுவரை தமிழ்நாட்டின் வழங்கப்பட்ட அதிகபட்ச பொங்கல் பரிசு தொகையாக இது இருக்கிறது. இதன் பின்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. 2022, 2023, 2024 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் முதலமைச்ச ஸ்டாலின் தலைமையிலான அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்க பணத்தை வழங்கியது.
2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கவில்லை. இதனால் மக்கள் பெருமளவில் ஏமாற்றம் அடைந்தனர். அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன. இந்த சூழலில் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணமும் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு பொங்கல் பரிசு தொகுப்போடு 3000 ரூபாய் ரொக்க பணத்தை வழங்குவதற்கு தயாராகி வருவதாகவும் இது தொடர்பாக முதலமைச்சர் நிதி அமைச்சகத்தோடு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தொடர்ச்சியாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலினே பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதியே அந்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.
ஆனால் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்திருக்கிறது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் கிடையாதா என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொங்கல் பரிசு தொகையை இதுவரை அறிவிக்கவில்லை, ஆனால் பொங்கல் பரிசு தொகுப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டோக்கன்கள் அச்சிடப்பட்டு விரைவில் விநியோக பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. வரும் 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகமும் தொடங்கப்பட்டு விடும் என சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்கப்பணம் வழங்குமா வழங்காதா என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இதற்கிடையே அதிகாரிகள் தரப்பில் அரிசி ,சர்க்கரை , கரும்பு கொள்முதல் செய்வதற்கு முன்கூட்டியே பணம் ஒதுக்கினால் தான் அந்த பொருட்கள் கிடைக்கும் என்பதாலேயே அரசு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ரொக்க பணம் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானால் உடனடியாக அதனை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி விடலாம் என கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் பொங்கல் பரிசு தொகை குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட உடன் கடைகளுக்கு அந்த பணம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் எவ்வளவு கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
