‘காங்கிரஸ் கட்சி அழிவுப்பாதையில் செல்கிறது’ என கரூர் எம்.பி., ஜோதிமணி பகீரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு காங். தலைவர் செல்வப் பெருந்தகை ‘ஸ்லோ மோஷனில்’ ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.
கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். “தமிழ்நாடு காங்கிரஸில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது.

இதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.“எந்த அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் வாக்குச் சாவடி முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது. ஆனால் காங்கிரஸில் அது நடக்கிறது” என்று ஜோதிமணி வேதனை தெரிவித்தார். கொள்கை நிலைப்பாடுகள், அரசியல் செயல்பாடுகள் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடப்பதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் தவறான காரணங்களுக்காக கட்சி செய்திகளில் அடிபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். “கையில் ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை; இருப்பினும் அனைவரையும் அரவணைத்தே செல்கிறேன்” என்று கூறிய அவர், தேர்தல் படிவம் மற்றும் முகவர்கள் போடுவது தொடர்பாக பிரச்சினை இருந்தது உண்மைதான் என்றும், அதை தீர்த்து வைத்தாயிற்று என்றும் தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்சியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதாகக் கூறினார். ஜோதிமணியின் “அழிவுப் பாதை” குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்காமல், கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினை கட்சியின் உட்கட்சி விவகாரமாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
