சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 6வது நாளாக இன்றும் (டிச. 31) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றும் 6வது நாளாக போராட்டம் நடத்தினர்.

காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, இடைநிலை ஆசிரியர்களை, ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக தயாரித்து, அதில், ‘‘கரம் பிடித்து சொன்னீர்களே, கண்ணீர் துடைப்பேன் என்று; காத்திருக்கிறோம், எப்போது வருவீர்கள் எங்கள் முதல்வரே’’ என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளனர். அதை கையில் ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal