‘‘பா.ஜ.க.வின் வீழ்ச்சி தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்’’ என 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆவேசமாக பேசினார்.

தேசிய ஊரக வேலை (100 நாள் வேலை)வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்த மத்திய அரசையும், அதற்கு ஒத்துழைப்பு தரும், அ.தி.மு.க., அரசையும் கண்டித்து, தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட ஆண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்தியை அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. திரளானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய பூங்கோதை ஆலடி அருணா, ‘‘ அனைவருக்கும் வணக்கம். இன்று (25.12.2025) தமிழகத்தின் முதல்வர் மக்களின் முதல்வர் அவர்களின் அறிவுரையை ஏற்று, மாவட்டச் செயலாளர் அன்பு அண்ணாச்சி ஆவுடையப்பன் வழிகாட்டுதலில் இன்றைக்கு தேசிய மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில் புதிய வரைமுறைகளை கொண்டு வந்த ஒன்றிய அரசை வண்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மகாத்மாக காந்தி தேசிய வேலைவாய்ப்பு ஊரக திட்டம் 2005ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆண்டுகொண்டிருந்தபோதும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்குக்கிழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 100 நாள்வேலை திட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென்று ஒன்றிய அரசை வன்மையாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பெயர் மாற்றம் செய்து புறவாசல் வழியாக இந்தியை புகுத்தி, காந்தியை மற்றக்கடிக்கச் செய்யும் முயற்சியாக பார்க்கின்றோம். தற்போது, புதிதாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் கூட்டாட்சியின் தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டபோது, இந்த திட்டத்திற்கான நிதியுதவி ஒன்றிய அரசு 90 சதவீதமும், மாநில அரசு 10 சதவீதமும் நிதியை வழங்கி வந்தன.

தற்போது, புதிய நெறிமுறைகளின் வாயிலாக ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்கிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது. முக்கியமாக தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் திட்டமாக இந்த மாற்றங்கள் இருக்கின்றன. ஏனென்றால், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் முதல் 5 இடங்களைப் பிடித்து சிறப்பாக செயல்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி அதிகமாக நாம்தான் கொடுக்கிறோம். இந்த புதிய திட்டத்தின் வாயிலாக நமக்கு அதிகம் இழப்பு ஏற்படப்போகிறது. உதாரணத்திற்கு ஒன்றைச், ஜிஎஸ்டி என்கிற பொதுவரி மூலம் நாம் மத்திய அரசுக்கு 10 ரூபாய் கொடுத்தால் அவர்கள் 3 ரூபாய்தான் திருப்பிக் கொடுக்கிறார்கள். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் 3 ரூபாய் கொடுத்தால் அந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு 10 ரூபாய் கொடுக்கிறது. நம்முடைய பணத்தை எடுத்துக்கொண்டு நமக்கே துரோகம் செய்கிறது ஒன்றிய அரசு.

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பலனடைகிறார்கள். இதன் மூலம் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கிராமப்புறங்களில் பொருளாதரம் வளர்ச்சி அடைகிறது. இதனை நான் கூறவில்லை. சமூக பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்தினை பகிர்ந்துள்ளனர். ஆனால், இன்று ஒன்றிய அரசு ‘நாங்கள் சொல்கின்ற கிராமங்களில்தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்’ என்ற புதிய இலக்கை நிர்ணயித்ததோடு, எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் அவர்களே கூறிவருகிறார்கள்.

இதன்மூலம் மக்களாட்சியின் அடிப்படையான கிராமப்பஞ்சாயத்து, ஊராட்சித் தலைவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் வேதனையானது. இதையெல்லாம் கண்டித்து இன்றைக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் வாயிலாக அதிகளவில் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். 100 நாள் வேலையில் பழங்குடியின மற்றும் பட்டியலினத்துப் பெண்கள்தான் அதிகளவில் வேலைபார்க்கிறார்கள் என்பது உண்மை. இதன் மூலம் 60 சதவீதம் பெண்கள் பலன் அடைகிறார்கள்.

சமுதாயத்தின் விளிம்பில் உள்ள பெண்களையும் இழிவுபடுத்தும் விதமாக அவர்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக புதிய திட்டத்தை செயல்படுத்த தற்போது முயற்சி நடக்கிறது. பி.ஜே-.பி. ஆட்சி ஒரு சமதள சமுதாயத்தை உருவாக்காமல் பொருளாதார ரீதியாக ‘இருப்பவர்கள், இல்லாதவர்கள்’ என்ற இடைவெளியை உருவாக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. இன்று இந்த மண்ணில் அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும்தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஒன்றியத்தில் ஆளும் அரசு நடுத்தர, ஏழை மக்களுக்கான அரசு இல்லை. பெரும்பணக்காரர்களை மட்டும் ஊக்குவிக்கு அரசாங்கமாக இருக்கிறது. இதையெல்லாம் நாம் உள்வாங்கி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நமது முதல்வர் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறியது போல ‘நோ என்ட்ரி ஃபார் பி.ஜே-.பி.’ என்ற நிலையை உறுதி செய்யவேண்டும். பா.ஜ.க.வின் வீழ்ச்சி தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக, தீர்க்கமாக இருக்கவேண்டிய காலகட்டம்.

இன்றைக்கு பெரும் திரளானோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில், அதுவும் மகளிர் ஏராளமானோர் கலந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது. ஆலங்குளம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை என்பது நிரூபணமாகிவிட்டது.

நிச்சயமாக, உறுதியாக வருகின்ற மே மாதம் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’ என்று கூறி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கும்போது அந்த 200 தொகுதிகளில் ஆலங்குளம் தொகுதி வெற்றி பெற்றது. அதுவும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்கிற நல்ல செய்தியை நாம் முதல்வருக்கு அளித்திடவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து அயராது உழைத்திடுவோம்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal