ஒ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி ஆரம்பிப்பதா? அல்லது தி.மு.க.வில் இணைவதா? அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவதா? என்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒபிஎஸ் அறிவிக்கும் முக்கிய முடிவு குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், ஓபிஎஸ் தொடர்பாக தற்போதைய அரசியல் சூழல் குழப்பமான நிலையிலேயே உள்ளது… ஓபிஎஸ்ஸை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் ஓபிஎஸுக்கான தொகுதிகள், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து வழங்கப்படும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்ததாக தெரிகிறது.
உடனே தன்னுடைய தலைமையில் செயல்பட்டு வந்த “அதிமுக உரிமை மீட்பு குழு” இனி “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்” என்ற பெயரில் செயல்படும் என்று அறிவித்து, அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றிவிட்டார். புதிய கட்சிக்கான முதல் அதிகாரப்பூர்வ அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, டெல்லி பயணம், கட்சி பதிவு தொடர்பான தகவல்கள், அறிவிக்கப்பட்ட கூட்டத்தை திடீரென ஒத்திவைத்தது போன்ற நிகழ்வுகள் அனைத்தும், ஓபிஎஸ் எதையோ பெரிய முடிவுக்காக தயார் செய்து வருகிறார் என்பதற்கான அறிகுறிகளாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில்கூட வெளியிட்ட அவரது அறிக்கையில், லெட்டர் பேடில் இருந்த பெயர் மாற்றமும், முகவரி மாற்றமும் இந்த சந்தேகங்களை மேலும் உறுதி செய்தது. நீண்ட காலமாக அதிமுகவில் ஏற்பட்ட உள் மோதல்கள், தலைமைக் குழப்பங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு தோல்விகள், ஓபிஎஸ்ஸை சத்தமின்றி ஒரு புதிய அரசியல் பாதைக்கு வகுத்துள்ளதாக தெரிகிறது.
எனினும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதை ஏற்க தயங்குகிறார்களாம்.. அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொண்டால் மட்டுமே தேர்தல் பயணம் சரியாக இருக்கும், மற்றபடி அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து பிரித்து கொடுத்தால் செல்ல வேண்டாம் என்றெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்களாம். காரணம், செலவு செய்வதில் ஓ.பி.எஸ். கணக்குப் பார்ப்பதால் தனிக்கட்சிக்கு வாய்ப்பில்லை. அப்படி ஆரம்பித்தாலும், அது புஸ்வானமாகிவிடும்.
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் அல்லது டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் உள்ளடி வேலை செய்து தோற்கடிக்கலாம் என்ற அச்சமும் ஓபிஎஸ் தரப்பில் உள்ளதாம். இதன்காரணவே, பாஜக கூட்டணியில் இணைவதற்கான தயக்கத்தின் முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில், அதிமுக ஒருங்கிணைப்பு ஏற்பட்டால் மட்டுமே கூட்டணியில் தொடரலாம், இல்லாவிட்டால் என்.டி.ஏ. கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளில் போட்டியிடுவது தேவையில்லை என்பதே ஓபிஎஸ் தரப்பினரின் நிலைப்பாடாக உள்ளது.மற்றொருபக்கம் எடப்பாடியின் பிடிவாதத்தை கண்டு, அதிமுக ஒருங்கிணைப்பை பாஜக தரப்பே முழுமையாக கைவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அதிமுக ஒன்றிணைப்பு சாத்தியமில்லை என்ற முடிவுக்கு ஓபிஎஸ்ஸும் வந்துவிட்டாராம். எனினும் தேர்தல் நெருங்குவதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழம்பி கிடப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர்களின் கருத்தை ஓபிஎஸ் கேட்டிருந்தார். அப்போது பலரும், தவெக கூட்டணியில் சேரலாம், திமுக கூட்டணியில் சேரலாம் என்று சொன்னார்களாம்.. இதில் எதை ஓபிஎஸ் தேர்ந்தெடுக்க போகிறார் என்பதை அறிவிக்கவே, இன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தன்னை கடைசிவரை புறக்கணித்துவிட்டதால், திமுகவுடன் சேர்ந்து செயல்படவும் ஓபிஎஸ் துணிவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர். மேலும் சிலர், தவெகவுடன் நேரடியாக இணைய விருப்பம் இல்லாவிட்டாலும், டிடிவியுடன் ஓபிஎஸ் இணையலாம் என்கிறார்கள்.. காரணம், தவெகவுடன் இணைந்து செயல்படுவதில் ஏற்கனவே டிடிவி தினகரன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
எனவே, தினகரனுடன் சேர்ந்துவிட்டால் கூட்டணியும் எளிதாகும் என்பதே ஓபிஎஸ் தரப்பின் கணக்காக உள்ளது. மொத்தத்தில், ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கூட்டமாக இது பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ்ஸூக்கு சவால்கள் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய கட்சி குறித்த முறைப்படி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாளைய தினம் எம்ஜிஆர் நினைவு தினத்தை பயன்படுத்தி, உணர்வுப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்புள்ளது. ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட இமேஜ், மென்மையான அரசியல், அனுபவம் ஆகியவை அவருக்கு பலமாக இருந்தாலும், வலுவான அமைப்பு, பெரும் தொண்டர் பலம், தெளிவான கூட்டணி அரசியல் இல்லையெனில், ஓபிஎஸ்ஸின் புதிய கட்சிக்கு சவால்கள் காத்திருக்கின்றது’’ என்றனர்.
