தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், இந்த மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளுக்குட்பட்டு கட்டப்படவில்லை. இந்த கட்டுமானங்களில் ஊழல் நடந்துள்ளதால் பொதுப்பணித்துறையின் அமைச்சராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ அல்லது மத்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘மனுதாரர் அளித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் துறையின் ஆணையருக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளனர். அதனடிப்படையில் மனுதாரர் அளித்த புகார் முடித்து வைக்கப்பட்டு, பழனிசாமிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு கைவிட்டுவிட்டது என்றார்.
அரசு தரப்பின் முடிவுக்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறுவதை நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது குறித்து மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வார காலத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
