தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் முக்கியத் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றது. அதில் பெரும்பிடுகு முத்தரையர் படமும் இடம்பெற்றது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் முத்தரையர் சமுதாய மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தனர். அதன்பிறகு வந்த எடப்பாடி பழனிசாமி முத்தரையர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற குமுறல் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் பெரும்பிடுகு முத்தரையர் படத்தை முதல் அரசியல் மாநாட்டில் போட்டு, அச்சமுதாய வாக்குகளை குறிவைத்தார் விஜய்!
இந்த நிலையில்தான் தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக தபால்தலை வெளியிட வேண்டும் என முத்தரையர் சமுதாயம் சார்பில் நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வந்தது. கடைசி நேரத்தில் தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் இது தொடர்பாக சமீபத்தில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரனும் முயற்சிகள் மேற்கொண்டார். இந்த நிலையில் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா கடந்த 14ம் தேதி டெல்லியில் நடந்தது நடைபெற்றது.

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரும், தி.மு.க. பிரமுகருமான தங்க கோபிநாத் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘முத்தரையர் சமூகத்தின் 78 ஆண்டு கால ஏக்கத்தை, கோரிக்கையை, அங்கீகாரத்தை 2026-ம் ஆண்டு தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களில் முத்தரையர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ள கழக தலைவர் அவர்களுக்கு நன்றிகள்..!’’ என பதிவிட்டிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பெரம்பலூர் தொகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர் நேர்கானல் நடந்தது. அந்த நேர்கானலில் கலந்துகொண்ட தங்க கோபிநாத், ‘தலைவரே இரண்டு கோரிக்கைகள் இருக்கிறது..’ என ஸ்டாலினிடம் நேரடியாக சொன்னவரிடம், ‘‘என்ன கோரிக்கை?’’ என ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.
அதற்கு ‘சுதந்திரம் அடைந்து 78 ஆண்டு காலம் கடந்த பின்னரும் தமிழகத்தில் முத்தரையர் சமுதாயத்திற்கு தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கத்தை தலைவர் அவர்கள் போக்க வேண்டும்’ என தைரியமாக கூறியிருக்கிறார். அப்போது ‘கண்டிப்பாக பரிசீலிப்போம்’ என ஸ்டாலின் கூறினாராம்.
பெரம்பலூர் தொகுதிக்கு நடந்த நேர்காலின் போது திமுகவின் சீனியர் அமைச்சரான கே.என்.நேருவும் அமர்ந்திருந்தார். அவரது மகன் அருண்நேருவும் அமர்ந்திருந்தார். அருண் நேருவுக்குத்தான் சீட் என முடிவு செய்த பிறகும், நேர்கானலில் கலந்துகொள்ள வழக்கறிஞர் தங்க கோபிநாத்துக்கு வாய்ப்பு கிடைத்தபோது முத்தரையர் சமுதாயத்திற்காக ஸ்டாலினிடம் எடுத்துக்கூறிய விதம்தான், முத்தரையர் சமுதாய உ.பி.க்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் முத்தரையர் வாக்குகளை பா.ஜ.க. குறி வைத்துவரும் நிலையில், அச்சமுதாயத்திற்கு ராஜ்யசபா சீட் என்ற அங்கீகாரத்தை கொடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
