தி.மு.க., அ.தி.மு.க.வில் பலர் தொகுதி மாறி போட்டியிட விரும்பும் நிலையில், அ.தி.மு.க. விருப்ப மனு தாக்கலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொகுதி மாறி போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.
அ.தி.மு.க.வில் தேர்தலில் போட்டியிட நேற்று முதல் விருப்ப மனுக்களை அளித்தனர். நேற்று எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.
இந்த நிலையில்தான், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் சிவி சண்முகம் விருப்பமனு செய்துள்ளார். அதில் விழுப்புரத்துக்கு பதில் மயிலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கோரியுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் கடந்த 2011, 2016 சட்டபை தேர்தல்களில் சிவி சண்முகம் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகம் தோல்வியடைந்தார். கடந்த தேர்தலில் சிவி சண்முகம் மொத்தம் 87,403 ஓட்டுகள் பெற்றார். திமுக சார்பில் களமிறங்கிய வேட்பாளர் ஆர் லட்சுமணன் 1 லட்சத்து 2 ஆயிரத்து 271 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிவி சண்முகம் 14,868 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் அவர் தனது தொகுதியை மாற்ற முடிவு செய்துள்ளார்.
அதற்காக அவர் தேர்வு செய்த தொகுதிதான் மயிலம். இந்த மயிலம் சட்டசபை தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டில் அதிமுக சார்பில் கேபி நாகராஜன் என்பவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ல் திமுகவின் மாசிலாமணி வென்றார்.
கடந்த 2021ம் ஆண்டில் பாமக சார்பில் சிவக்குமார் களமிறங்கி வெற்றி பெற்றார். பாமகாவின் சிவக்குமார்(பெற்ற வாக்குகள் 81,044) சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த திமுகவின் மாசிலாமணியை (பெற்ற வாக்குகள் 58,574) வீழ்த்தி வாகை சூடியிருந்தார். இந்த மயிலம் தொகுதியில் வன்னியர்கள் ஓட்டு அதிகமாக உள்ளது. இதனால் பாமக கடந்த முறை களமிறங்கியது. சிவி சண்முகமும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான்.
இந்நிலையில் தான் அவர் மயிலம் தொகுதியில் களமிறங்கினால் எளிதாக வெற்றி பெறலாம் என்று கணக்கிட்டு அங்கு களமிறங்க விருப்ப மனு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
