‘‘தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும். கூட்டணிக் கட்சிகளின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் திமுக தங்களது ஆட்சி தொடரும் என சூளுரைத்து வர, மறுபக்கம் விஜய்யின் தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட இதர கட்சிகள் திமுகவை வீழ்த்துவோம் என கூறி தேர்தல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைக் தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்த மறுநாளே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில், பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ள 65 தொகுதிகளின் பட்டியலை அமித் ஷாவிடம் நயினார் நகேந்திரன் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் மயிலாப்பூர், தியாகராய நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய தொகுதிகள் பாஜகவிற்கு சாதகமான தொகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பட்டியலில் கோவை தெற்கு மற்றும் வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அதிமுகவிடம் அந்தப் பட்டியல் வழங்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக 54 தொகுதிகள் கேட்பதாக வெளியான தகவல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் 23 செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விருப்ப மனுக்கள் பெற்று தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, அதிமுக கூடணியில் பாஜக 60 தொகுதிகளைக் கேட்பதாக வெளியாகி வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும். இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சியும் சீட் அதிகமாகத்தான் கேட்பார்கள். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
