‘தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப்பணியின் வாயிலாக 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்’ என ஆர்.எஸ்.பாரதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) காரணமாக சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். “தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் திமுக ஈடுபடும். டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியான பிறகு SIR பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்” என்று அவர் கூறினார்.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கையை உயர்த்தியது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.பாரதி மேலும், “இந்தியாவில் SIR பணி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் போன ஒரே கட்சி அதிமுகதான்” என்று விமர்சித்தார். போலி வாக்காளர்களை நீக்குவதால் பட்டியல் சுத்தமாகும் என்றாலும், தகுதியானவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று திமுக கவனம் செலுத்தும் என்று உறுதியளித்தார். இந்த நீக்கம் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போலி பெயர்கள் ஆகியோரை உள்ளடக்கியது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து பேசிய பாரதி, “மோடி, அமித் ஷா அவசியம் வரணும். அப்போதான் 2024-ல் 39 தொகுதிகள் எப்படி 40 ஆனவோ, அதே போல் இப்போ 159 தொகுதிகள் 200+ ஆக மாறும்” என்று கிண்டல் செய்தார். “அமித் ஷா எத்தனை முறை வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு 8 முறை மோடி வந்தும் எதுவும் எடுபடவில்லை” என்று தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.இந்தக் கருத்துகள் திமுகவின் தேர்தல் உத்தியை வெளிப்படுத்துகின்றன. SIR பணியால் ஏற்படும் நீக்கங்களை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கிறது. அதே நேரம் பாஜகவின் தமிழ்நாடு பிரச்சாரத்தை கிண்டல் செய்து, திமுகவின் வலிமையை வலியுறுத்துகிறது. 2026 தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய அரசியல் விவாதங்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal