திரைப்படத் தயாரிப்பாளரை ‘பிளாக்மெயில்’ செய்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், மதுபான ‘‘பார்’’ உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், ‘யூடியூபர்’ சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

தி.மு.க., அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக, சவுக்கு சங்கர், அவரது யூடியூப் சேனல்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனால், அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

தற்போது, சவுக்கு மீடியா நிறுவனத்தை சென்னை ஆதம்பாக்கத்தில் சங்கர் நடத்தி வருகிறார். இதற்கிடையே, ‘எம்.ஆர்., புரொடக் ஷன்ஸ்’ மற்றும் ‘வணக்கம் தமிழா மூவிஸ்’ சார்பில் மகேஷ் ரம்யா, ஆயிஷா சாதிக் இணைந்து, ரெட் அண்டு பாலோ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

அத்திரைப்படம் குறித்து, தன் யு டியூப் சேனலில் சங்கர் விமர்சனம் வெளியிட்டார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வாயிலாக ஈட்டப்பட்ட பணத்தில், இப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக, அதில் குற்றஞ்சாட்டியிருந்தார். இது ஒரு போதைப்பொருள் படம் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, சங்கர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜூன் மாதம் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், நவ., 2ம் தேதி அவருக்கு ‘சம்மன்’ அனுப்பினர். அதை சவுக்கு சங்கர் ஏற்காததால், அவரது அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

இந்நிலையில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமையில் போலீசார், பல்லாவரம் ரேடியல் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சவுக்கு சங்கரை கைது செய்ய நேற்று காலை சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சவுக்கு சங்கர், உள்ளே இருந்து கதவை தாழிட்டு, ‘‘என்னையும், என் குழுவையும் அநியாயமாக கைது செய்ய பார்க்கின்றனர்’’ என, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.

போலீசார் நீண்ட நேரம் பேச்சு நடத்தியும், ‘‘வழக்கறிஞர் வராமல் கதவை திறக்க மாட்டேன்’’ என சங்கர் கூறியிருக்கிறார். கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்காவிட்டால், கதவை உடைத்து உள்ளே வர வேண்டியிருக்கும் என போலீசார் எச்சரித்தும், கதவை சங்கர் திறக்கவில்லை. பின், தீயணைப்பு வீரர்களை வரவழைத்த போலீசார், அவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின், வீடு முழுதும் சோதனையிட்டு, ஆவணங்கள், பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேநேரம், அவரது மொபைல் போன் கிடைக்கவில்லை.

கைதுக்கு முன், ‘திரைப்படத்தை விமர்சித்ததால் கைது’ என, சங்கர் கூறி வந்த நிலையில், மதுபான பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததால், சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் பகுதியில், ஹரிச்சந்திரன் என்பவர் புதிதாக மதுபான பார் துவக்கியுள்ளார். அந்த பார் பற்றி பொய்யான தகவல்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக, சங்கர் மிரட்டியதாக, போலீசார் கூறுகின்றனர். உரிமையாளரை மிரட்டி, ‘ஜிபே’ வாயிலாக, 94,000 ரூபாய் பெற்று கொண்டதாக, ஹரிச்சந்திரன் அளித்த புகாரில்தான், சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார் என, போலீசார் கூறினர்.

விசாரணைக்கு பின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கரை, வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சவுக்கு சங்கர் மீது இன்னும் அடுத்தடுத்த வழக்குகள் பாயலாம் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal