‘தமிழகத்தில் தி.மு.க. துடைத்து எறியப்படும்’ என அமித் ஷா கர்ஜித்தார். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வுக்குள் ஓ.பி.எஸ். மீண்டும் வரலாம் என்கிற தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்தான், ‘‘சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், தவெக தலைவர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரலாம்’’ என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

வைகைச்செல்வன்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தொண்டர்கள் எதிர்பார்த்த பெரும் கூட்டணி அமையும் என்று பேசி இருந்தார். அதேபோல் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருந்தார். இதன் காரணமாகவே தவெக கொடியை பார்த்து, “கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்று பேசி இருந்தார்.

ஆனால் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்போருடன் மட்டுமே கூட்டணி என்று தவெக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் விஜய் தரப்பு இன்னும் அதிமுகவை பெரியளவில் விமர்சிக்கவில்லை. புதுச்சேரியில் பேசிய போதும் கூட பாஜக பெயரையே சொல்லவில்லை. மத்திய அரசு என்று மட்டுமே கூறி சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதனால் ஜனவரி மாதத்திற்கு பின் அதிமுக கூட்டணிக்குள் விஜய் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அதிமுக பொதுக்குழுவிலும் கூட யாரும் விஜய் பற்றி வாயே திறக்கவில்லை. கடைசி நேரத்தில் எந்தக் கட்சியும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால், அவர் அதிமுக பக்கம் சாய்வார் என்று எடப்பாடி பழனிசாமி கருதி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், ‘‘அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதர்கு 2, 3 கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஜனவரி மாதத்தில் எங்கள் கூட்டணி இறுதி வடிவம் பெறும். அதேபோல் பொது எதிரியான திமுகவை வீழ்த்த பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று எதிர்பார்த்துள்ளோம்.

அதில் விஜய்யும் இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று பாஜக கட்டாயப்படுத்தவில்லை. வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக ஆலோசிக்கிறார்கள். ஆனால் இருவரையும் கூட்டணிக்குள் சேர்த்து கொள்ளலாம் என்று பாஜக கருதுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் இணையலாம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் இருவரும் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், அது என்டிஏ கூட்டணிக்கு மிகப்பெரிய சிக்கலாகிவிடும். இதனால் அமித்ஷா வருகையின் போது முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal