வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் பொது எதிரி தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் இணையவேண்டும் என்று விஜய்க்கும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி, துரோகிகளுக்கு (ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா) மீண்டும் இடமில்லை. கூட்டணி குறித்து முடிவு செய்ய அனைத்து அதிகாரிகமும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு என பொதுக்குழுவில் வாயிலாக எடப்பாடி பழனிசாமி ‘மெசேஜ்’ கொடுத்திருக்கிறார்.

சட்டசபைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருப்பதால், இந்தப் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

இதனால் தற்காலிக அவைத் தலைவராக கேபி முனுசாமி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்று பேசினார். தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுக்குழுவின் முதல் 8 தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 8 தீர்மானங்களை வாசித்தார்.

அதன்படி, 1. கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது என்றும், கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்றும், தீவிர வாக்காளர் திருத்த பணியான ஷிமிஸிஐ அதிமுக வரவேற்கிறது என்றும், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள்.. தமிழக மக்களை ஏமாற்றி, போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதலமைச்சருக்கு கண்டனம் என்றும், தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது – காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு கண்டனம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

அதேபோல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களை தொடர்ந்து கடனாளியாக்குகிறது திமுக அரசு என்றும், தொடர் கொள்ளைகள், கொலைகள், வழிபறி என சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது காவல்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் என்றும், நீட் உளிட்ட திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மதுரை மேயர் ராஜினாமா செய்யும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதற்கு கண்டனம் என்றும், பட்டியலினத்தவர்களை ஒதுக்கி வைப்பது திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கண்டனம் என்றும், நீதித்துறை மீதான ஆட்சியாளர்களின் மிரட்டல்களை கைவிடவேண்டும் என்றும், நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை பொதுக்குழு கண்டிக்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு குறித்து எதிர்பார்த்த நிலையில், ‘துரோகிகள்’ என எடுத்த எடுப்பிலேயே ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதை உறுதிபடுத்தி விட்டார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal