சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரபல யு டியூபரான சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

‘‘பத்திரிகையாளராக என் பணியை தொடர முடியாமல் தமிழக போலீசார் இடையூறு செய்து வருகின்றனர். என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மாநில உள்துறை செயலர் மற்றும் போலீசிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில் நிவாரணம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் என்னுடைய கோரிக்கையும் தாண்டி சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. குறிப்பாக என் மீதான வழக்குகள் அனைத்தையும் நான்கு முதல் ஆறு மாத காலத்திற்குள்ளாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

புலன் விசாரணையில் உள்ள 13 வழக்குகளை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், என் மீதான நிலுவையில் உள்ள 24 வழக்குகளை விசாரணை நீதிமன்றம் ஆறு மாத காலத்திற்குள்ளாக விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இவை அனைத்தும் மனுவில் வைக்கப்படாத கோரிக்கை. எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி தீபஸ்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal