‘‘நான் ஒரு அரசியல்வாதி கிடையாது. நான் பிசினஸ்மேன். ஒரு ரூபாய் கொடுத்தால் 1.50 ரூபாய் வருதான்னுதான் யோசிப்பேன். எனக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் 200 சதவிகிதம் செய்வேன். அரசிடம் பணம் இல்லை என்றால்கூட என் அப்பா பணத்தை வைத்து செய்து தருவேன்’’ மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் பேசியிருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏழை மக்கள் தங்கள் கிட்னியை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்திய திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமங்களை, அரசு ரத்து செய்தது.
மேலும் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உரிமையாளர் சீனிவாசன். இவரது மகன் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் மீதும் கடுமையாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில்அந்த பகுதி மக்களுடன் எம்எல்ஏ நேர்காணல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.அப்போது நிர்வாகி ஒருவர் கிட்னி விவகாரம் குறித்து, கதிரவனிடம் கேட்டுள்ளார் அப்போது பேசிய கதிரவன் அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவன், ‘‘எப்போது காசு குறைவாக இருக்கிறதோ, அப்போது கிட்னி எடுத்து விடுவோம் என்று கூட்டத்தில் கேள்வி கேட்டதால் நகைச்சுவையாக சொன்னேன். என் அப்பாவின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விலை 14 கோடி ரூபாய். ஒரு அறுவை சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே எனக்கு கிடைக்கிறது, நாங்கள் இதுவரை 252 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம் .ரோல்ஸ் ராய்ஸ் வாங்க, திருப்பட்டூர் ஊரில் உள்ள அனைவரின் கிட்னியையும் எடுக்க வேண்டிவரும்’’ என்று கூறினார். அப்போதே மக்கள் கடும் கோபமானார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தொகுதியில் நடந்ட கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட கதிரவன், ‘‘நான் ஒரு அரசியல்வாதி கிடையாது. நான் பிசினஸ்மேன். ஒரு ரூபாய் கொடுத்தால் 1.50 ரூபாய் வருதான்னுதான் யோசிப்பேன். எனக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் 200 சதவிகிதம் செய்வேன். அரசிடம் பணம் இல்லை என்றால்கூட என் அப்பா பணத்தை வைத்து செய்து தருவேன். எனவே, எனக்கு மீண்டும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
ஏற்கனவே கிட்னி முறைகேடு விவகாரத்தில் சிக்கியிருக்கும் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கதிரவனின், இந்த ஆணவப் பேச்சுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, தி.மு.க. தலைமையையும் எரிச்சலடைய வைத்திருக்கிறது.
