அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என சில சீனியர்கள் முயற்சி எடுத்தும் பலன் அளிக்காத நிலையில், டிசம்பர் 15க்கும் திருந்தவேண்டும்… இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள்’ என ஓ.பி.எஸ். கெடுவிதித்த நிலையில், இன்றைய அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்னும் ஐந்து மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன. அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல்கள் தலைதூக்கி உள்ள நிலையில், திமுகவையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் அதிமுக உள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நிற்கும் நிலையில், இதில், செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார்.. இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரண்டு, அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியையும் கையில் எடுத்து வருகின்றனர். மற்றொருபக்கம், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் டி.டி.வி.தினகரன் கூறிவந்த நிலையில், செங்கோட்டையன் விஜய் கட்சியிலேயே இணைய வாய்ப்புள்ளதாகவும செய்திகள் இணையத்தில் பரபரத்து வருகின்றன.

இதற்கிடையேதான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக.

வரும் டிசம்பர் 15ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். அதற்கு திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்’’ என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, கட்சியை விட்டு விலக்கியவர்களை மீண்டும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அத்துடன் திமுகவை எதிர்ப்பதிலேயே தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்காகவே பிரச்சாரங்களையும், மாவட்ட செயலாளர் கூட்டத்தையும் நடத்தி வருகிறார். கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி அந்தவகையில் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் நவம்பர் 30ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க போகிறார்.

ஏற்கனவே செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபிசெட்டிபாளையத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் பலரும் தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பியிருந்தனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், 30ம் தேதி பொதுக்கூட்டம் கோபியில் நடக்க போகிறது. ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்‘ என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்ட பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

செங்கோட்டையன் மற்றொரு பக்கம், மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலோசனையிலும் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். கடந்த 5ம் தேதி, சென்னையில் மா.செ. கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியிருந்தார். அதிமுக மூத்த உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 82 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அந்த கூட்டத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் அதிமுக கூட்டணிக்கு எந்த கட்சியும் வராதது, உள்கட்சி மோதல் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இந்நிலையில், இன்றைய தினம் 82 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி.. தன்னுடைய இல்லத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார். எஸ்.ஐ.ஆர். பணிகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. ஏற்கனவே பிஎல்ஓக்களுக்கு படிவங்கள் சரியாக கிடைக்க பெறுவதில்லை என்றும், திமுக தரப்பில் முறைகேடுகள் நடப்பதாகவும் அதிமுகவில் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற புகார்களை பிஎல்ஓக்கள் எப்படி கையாளுகிறார்கள்? எஸ்ஐஆர் பணிகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன? என்றெல்லாம் இன்று எடப்பாடி பழனிசாமி கேட்டறிவார் என தெரிகிறது.

ஓபிஎஸ் கெடு அத்துடன் பூத் கமிட்டி பணிகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தலாம் என்கிறார்கள். இதில் ஒருசில மாவட்ட செயலாளர்களிடம் மட்டும் உட்கட்சி விவகாரங்களை, தனித்தனியாக ஆலோசனை நடத்த போகிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களின் அரசியல் துரிதமாகி வரும் நிலையில், அதிலும் ஓபிஎஸ் கெடு வைத்துள்ள நிலையில், இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுகவுக்குள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal