கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான, வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகல் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவை ஏற்று, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தி, வரைவு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கியது. இந்நிலையில் இன்று 21ம் தேதி அரசியல் கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான, வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகலை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
அப்போது வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என தவெக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கையை முன்வைத்தன. இதற்கு, ”ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கும் என்பதால் நகல்களை வழங்க முடியாது” என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, மனுத்தாரர்களான தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சி தரப்பிற்கு நகல்களை வழங்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
