வங்கக்கடலில் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி, உருவாக இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகர தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதாவது இன்று பிற்பகலுக்கு பிறகு மழை தீவிரமடையும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் தான் தற்போது வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

இதனால் தமிழகத்தில் வரும் 21, 22 ஆம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும். கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறுகையில், அடுத்தடுத்து உருவாகும் 3 காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் மாதம் இறுதி முழுவதும் கனமழை பெய்யும். குறிப்பாக சென்னையில் இருந்து குமரி வரை கடலோர மாவட்டங்களில் எல்லாம் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்யும் என்று கூறியிருந்தார்.

இதேபோல் புயல் உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும், இரண்டாவது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 20 முதல் 23 ஆம் தேதி அல்லது அதற்கு மேல் கனமழையும், மூன்றாவது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் நவம்பர் மாத இறுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியிருந்தார். 3 வது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியே புயலாக மாற வாய்ப்பு உள்ளது எனவும், எனினும் அடுத்தடுத்த நாட்களில் தான் இது பற்றி உறுதியாக சொல்ல முடியும் எனவும் கூறியிருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal