SIR – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. வரும் ஜனவரி மாதத்திற்குள் கூட்டணிகள் இறுதி வடிவம் பெறும் எனத் தெரிகிறது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தவெக கூட்டணி எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
இதற்கிடையே, சட்டசபைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் SIR பணிகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், SIR – மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்தையும் கட்டாயம் அழைக்க வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தமிழக வெற்றி கழகத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் அளிக்க வேண்டும் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
