பீகார் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் வரலாற்று சாதனையாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதன்மூலம் பீகாரில் ஆட்சி அமைப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வரும் பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 65.09 சதவீதம் வாக்குகள் பதிவாகி, பீகார் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில், மக்கள் பெருமளவில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 20 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1,302 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். அதில் 136 பெண்களும், 8 அமைச்சர்களும் களத்தில் இருந்தனர். வாக்குப்பதிவு பணிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் அமைதியாகவே நடந்த நிலையில், சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சுட்டிக்காட்டுகின்றன. மொத்தம் 243 இடங்களில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ கூட்டணிக்கு 140க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் மதிப்பீடுகள் படி, பா.ஜ கூட்டணிக்கு 135 முதல் 167 இடங்கள் வரை கிடைக்கும் எனவும், இந்தியா கூட்டணிக்கு 70 முதல் 103 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ கூட்டணியில் பா.ஜ தனியாக 69 இடங்களும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 62 இடங்களும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் 63 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சிக்கு பெரிய தாக்கம் இல்லை என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது. அப்போது பீகார் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ கூட்டணி ஆட்சி அமைக்குமா? அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்பது தெரிந்துவிடும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal