அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார், பொன்முடியின் மகன் ஆகியோர் ஏற்கனவே மா.செ.க்களாக மகுடம் சூடிய நிலையில், தி.மு.க.வின் சீனியரான துரைமுருகனின் மகனும் மா.செ.வாக மகுடம் சூடிவிட்டார். இந்தநிலையில்தான் மலைக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மா.செ.வாகப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியது போல், முதன்மை செயலர் நேருவின் மகன் அருண்குமாருக்கு, திருச்சி மத்திய மாவட்ட செயலர் பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். எதிர்காலத்தில் துணை முதல்வர் உதயநிதிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வின் மூத்த மாவட்ட செயலர்கள், மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு, மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் போன்ற முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன.
சமீபத்தில், தி.மு.க., பொதுச்செயலரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு, வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. துவக்கத்தில் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டு, பின் மாவட்ட செயலர் பதவி வழங்கப்படும்.
இந்நிலையில், தி.மு.க., முதன்மை செயலரும், அமைச்சருமான நேருவின் மகனும், பெரம்பலூ தொகுதி எம்.பி.,யுமான அருண் நேரு, மாவட்ட செயலர் பதவி வழங்குமாறு, அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று அருண் நேரு சந்தித்து, தனக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கினால், சட்டசபை தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதாக உறுதி அளித்ததாராம். இதனால், திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக அருண் நேரு நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
சமீபத்தில், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணியை அழைக்காமல், அவர் பெயர் இல்லாமல், லால்குடியில் அருண்நேரு ஆதரவாளர்கள், ‘பூத் ஏஜன்ட்’ கூட்டத்தை நடத்தினர். இதனால், திருச்சியில் நடந்த, ‘என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி’ ஆலோசனைக் கூட்டத்தில், தன் மனக்குமுறலை வைரமணி வெளிப்படுத்தினார்.
அப்போது, ‘மாவட்ட செயலராகிய என் படம், பெயர் இல்லாமல், சில நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை நடத்துவது, எனக்கு வருத்தமாக உள்ளது; வெளியே சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. மாவட்ட செயலர் பதவி பெரிதல்ல. கருப்பு, சிவப்பு வேட்டி கட்டிய இந்த வைரமணி, தி.மு.க.,வுக்கு துரோகம் செய்ய மாட்டான். நான் இறக்கும் போது, என் உடலில் தி.மு.க., கொடியை போர்த்த வேண்டும் என்பது தான் என் ஆசை. கட்சியில் பதவிக்கு தான் மரியாதை இருக்கிறது. என் சொந்த ஊரில், என் பெயர் போடாமல் கூட்டம் நடத்தினர்.
கட்சி உறுப்பினராக கூட இல்லாதவர்கள் பதவிக்கு வந்துள்ளனர். அவர்கள் எப்படி பதவி வாங்கினர் என்பதை, நான் சொல்ல விரும்பவில்லை. முதன்மை செயலருக்கு, மாவட்ட செயலர் மரியாதை தர வேண்டும். மாவட்ட செயலருக்கு, ஒன்றிய செயலர் மரியாதை தர வேண்டும். சில புல்லுருவிகள் செய்கிற செயல் வேதனை தருகிறது’’ என வைரமணி பேசினார்.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு தனது பதவி போகப்போகிறது என்ற ஆதங்கத்தில் பேசியிருக்கிறார் வைரமணி என்கிறார்கள். ஆக மொத்தத்தில் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் ஆகப்போகிறார் அருண் நேரு! இதானல் மலைக்கோட்டை உடன் பிறப்புக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
