மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல், வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
வி.ஏ.ஓ., அலுவலர் சங்க மாநில தலைவர் அருள்ராஜ், சிவகங்கை மாவட்டம், சீவலத்தி வி.ஏ.ஓ.,அகமது பயஸ் தாக்கல் செய்த மனு:மாவட்ட பணியிட மாறுதலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலுள்ள, 218 வி.ஏ.ஓ., காலிப்பணியிடங்களுக்கு செப்., 1 முதல், 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டது.
அலுவலர்களின் முதுநிலை பட்டியலை கருத்தில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த தேதியை அடிப்படையாக கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்களை பரிசீலித்தது ஏற்புடையதல்ல என, இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்றம் தடை விதித்தது.மேலும், 218 காலிப்பணியிடங்களையும் நேரடியாக நிரப்ப முடிவு செய்து, பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அனுப்பியது.
இதனால் இடமாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 218 வி.ஏ.ஓ., பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். இடமாறுதல் கோரிய தகுதியான வி.ஏ.ஓ.,க்களின் மனுக்களை பரிசீலித்து, இடமாறுதல் வழங்கிய பின் நேரடி முறையில் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டனர்.
நீதிபதி கே.குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில், ‘‘மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வருவாய்த்துறை செயலர், கமிஷனர், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. விசாரணை நவம்பவர் 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது’’என்றார்.
