கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்களிடம் பேசிய சீமான், ‘‘ பாஜ கூட்டணிக்கு வராவிட்டால் விஜய் மீது சிபிஐ விசாரணை தீவிரமடையும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் ரூ.20 லட்சம் வழங்கியதற்குக் காரணம், சிபிஐ விசாரணையில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எதிராகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான். தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? 41 பேர் இறப்புக்குக் காரணமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் சிபிஐ வழக்கு விசாரணை எப்படி இருக்கும்.

மாநில போலீஸ் விசாரிக்கும் போது முன்ஜாமின் கேட்ட ஆனந்த், சிபிஐ விசாரணை வந்த பிறகு முன் ஜாமின் மனுவைத் திரும்பப் பெற்றது ஏன்? விஜயை சிபிஐ பாதுகாக்கப் போகிறதா? கரூர் சம்பவத்தில் எப்ஐஆரில் விஜய் பெயர் சேர்க்கப்படாதது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும். நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்கள் என் பின்னால் வரட்டும். நடிகர்கள் பின்னால் செல்பவர்கள் என் பின்னால் வர வேண்டாம்.

பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு நடைபெறும். அதில் அனைத்து சட்டசபை தொகுதி வேட்பாளர்களும் முழுமையாக அறிவிக்கப்படுவார்கள். திருச்சியில் மாநாடு நடைபெறுவதால் திருப்புமுனை என்று நினைக்க வேண்டாம், எங்கள் திருப்பம் எங்களது சிந்தனையில் இருக்கிறது. மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் எந்தக் கொம்பாதி கொம்பனையும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள்’’ இவ்வாறு சீமான் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal