அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் அமித் ஷா வீட்டுக்கு அவர் சென்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்தார் இபிஎஸ். இந்நிலையில் செங்கோட்டையன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். அதுவரை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் ஹரித்துவார் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அமித் ஷாவை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன். ‘பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினர் ஒன்றிணைய வேணடும்’ என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.
‘அ.தி.மு.க. சிதறிக் கிடக்கிறது’ என்ற ஒரு மாயை பிம்பத்தை தி.மு.க.தான் உருவாக்கி வருகிறது என்பது விபரமறிந்தவர்களுக்கு நன்னு தெரியும். அது சரி, அ.தி.மு.க. ஒன்றிணையவேண்டும்…. பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.விற்கு வரவேண்டும் என்றால், முதலில் திருநாவுக்கரசர், அமைச்சர்கள் ரகுபதி, சேகர் பாபு, முத்துசாமி, ராஜகண்ணப்பன் தவிர, அமைச்சர் பதவிதான் இல்லையே தவிர, அமைச்சரை விட ‘பவர் புல்’லாக வலம்வரும் செந்தில்பாலாஜி ஆகியோர் எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.விற்கு வருவார்களா? இது சாத்தியமா?
இதுபோலத்தான் ஓ.பி.எஸ். சசிகலா, தற்போது செங்கோட்டையனும். ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டாலோ, விலகிச்சென்றாலோ கட்சிக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், ஓ.பி.எஸ். ஒருவர் விலகியதால், முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அ.தி.மு.க.வில் பிரதிநிதியே இல்லை என்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இதையெல்லாம் நன்கு உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர்களுக்கு இனி இடமில்லை’ என்பதில் உறுதியாக இருக்கிறார்.
நேற்றைக்கு செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்ததை தமிழக பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களே ரசிக்கவில்லை…. விரும்பவில்லை…! இன்றைக்கு செங்கோட்டையன் ஒருவர் சொல்வதை எடப்பாடி கேட்க விரும்பினால், நாளைக்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் சொல்வதை எடப்பாடி கேட்கவேண்டும். இந்த நிலை நீடித்தால் பொதுச்செயலாளரின் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருக்காது. இந்த விவகாரத்தை எல்லாம் அமித் ஷாவின் கவனத்திற்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றுவிட்டார்.
இதற்கிடையேதான், அமித்ஷாவை நேற்று இரவு செங்கோட்டையன் சந்தித்ததாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே செங்கோட்டையனை வைத்து ‘மேலிடம்’ சில காய்களை நகர்த்தியது. அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், எடப்பாடிக்கு ‘கெடு’ விதித்துவிட்டு டெல்லி சென்று அமித் ஷா முன்பு ‘கைகட்டி’ உட்கார்ந்திருக்கிறார் செங்கோட்டையன். ஆனால், ‘தற்போதைக்கு எதுவும் செய்ய முடியாது’ என கைவிரித்து விட்டாராம் அமித் ஷா!
காரணம், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க த.வெ.க. இன்னும் காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நிலைமை தலைகீழாக மாறிவிடும்’ என பா.ஜ.க.வின் சீனியர்கள் சொன்னதை, கருத்தில் கொண்டு செங்கோட்டையன் விவகாரத்தில் ‘மௌனம்’ ஆகிவிட்டாராம் அமித் ஷா!