தென்காசி தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தலைவரித்தாடி வரும் நிலையில், இந்த விவகாரத்தைப் பயன்படுத்த த.வெ.க. உள்ளே நுழைந்து அரசியல் செய்வதுதான் உண்மையான உடன் பிறப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

விபின் சக்கரவர்த்தி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரவைத் தொடக்க விழாநடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டி.பி.வி. குழுமம் சார்பாக கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக 25 கணினிகளை தென்காசி தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்வுதான் தென்காசி மாவட்ட தி.மு.க.வில் புயலைக் கிளப்பியிருக்கிறது. காரணம், அரசு பள்ளி, கல்லூரிகளில் அரசியல், ஆன்மிக நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, சென்னை அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு பெரும் சர்ச்சைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு வாக்குகளை கவரும் விதத்தில் த.வெ.க. மா.செ. ஒருவர் உதவிகள் வழங்கியது, அப்பகுதியில் உள்ள உண்மையான தி.மு.க.வினரை கொதிப்படைய வைத்திருக்கிறது.

இதுபற்றி ஆலங்குளம் தொகுதியில் உள்ள நடுநிலையான உடன்பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், ஏற்கனவே தென்காசி மாவட்ட தி.மு.க.வில் உச்சக்கட்ட கோஷ்டிப் பூசல் நிலவுகிறது. இதனை த.வெ.க. சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. இதனை தி.மு.க. தலைமை கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் பூங்கோதை ஆலடி அருணா. இவரது தோல்விக்கு அப்போதைய மா.செ., சிவபத்மநாபனுடன் கைகோர்த்து செயல்பட்டவர்தான் இந்த விபின் சக்ரவர்த்தி. தற்போது, த.வெ.க.வில் இணைந்து மா.செ.வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னும் சொல்லவேண்டுமானால், இந்தக் கல்லூரியை தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த பூங்கோதை ஆலடி அருணாதான் கொண்டுவந்தார். அவர் இருக்கும் வரை இந்தளவிற்கு தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் இல்லை. இப்போது உட்கட்சிப் பூசல் அதிகரித்திருக்கிறது’’ என்றனர்.

இதற்கிடையே கல்லூரி முதல்வர் மற்றும் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது. ஆனால், இதற்கு உடந்தையாக இருந்த தி.மு.க. நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள்.

ஏற்கனவே, இளைஞர்கள், இளம்பெண்கள் வாக்குகளை குறிவைக்கும் த.வெ.க., அரசு கல்லூரியிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் உண்மையான உடன்பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal